தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) பணியாற்றும் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நாட்டின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையமாக, கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் விளங்கி வருகின்றன. மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிகளவில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய சமீபத்தில் திட்டமிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்த முடிவை கர்நாடக அரசு கைவிட்டது.
இந்நிலையில், ஐ.டி., துறையில் பணியாற்றுவோருக்கான வேலை நேரத்தை, 10 மணி நேரத்தில் இருந்து, 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில், கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில தொழிலாளர் நலத்துறை சமீபத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின்படி, இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களில், 45 சதவீதம் பேர், மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதுபோல, 55 சதவீதம் பேர் உடல்நல பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ஓவர்டைம் எனப்படும் கூடுதல் வேலை நேரம் உட்பட, 10 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேற்பட்ட நேரம், ஊழியர்கள் பணியாற்றும் நிலை உள்ளது.இந்நிலையில், 14 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தினால், அது ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மனிதநேயமில்லாத ஒரு முயற்சியாகும்.
தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு சேவையாற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு, கர்நாடகாவில் பணியாற்றும், 20 லட்சம் பேருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது, மூன்று ஷிப்டுகளில், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், அதை இரண்டு ஷிப்டுகளாக குறைத்து, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி விடுவர்.
இந்த சட்டத்திருத்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், 20 லட்சம் பேரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாக, கர்நாடக அரசு நேற்று அறிவித்துள்ளது. இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி, ‘இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்’ என, ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன.