முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி நலமுடன் இருப்பதாகவும், யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரி தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார். மு.க. அழகிரியின் மகன் பெயர் துரை தயாநிதி. இவர் தொழில்அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.

துரை தயாநிதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் துரை தயாநிதி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீரென வீட்டில் மயங்கி சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் பொது வார்டுக்கு மாற்றினார்கள்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார்.

மேலும் துரை தயாநிதிக்கு என்னென்ன மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் பற்றியும் மருத்துவர்களிடமும் கேட்டு அறிந்து கொண்டார். வேலூர் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே துரை தயாநிதி உடல் நலம் குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “துரை தயாநிதி ஆரோக்யமாக உள்ளார். அவரது உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal