மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடந்தவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக 10.7.2024 முதல் 19.7.2024 வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 19.4.2024 அன்றும் வாக்கு எண்ணிக்கை 4.6.2024 அன்றும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி திடீர் ‘விளக்க’ கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது பற்றி அவருக்கு நெருக்கமாக உள்ள மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘‘சார், மறைந்த முதல்வர் அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போது, வேட்பாளர் தோல்வியடைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனாலேயே கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை பயத்துடனேயே நன்றாக வேலை பார்ப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆன பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் அ.தி.மு.க. இரண்டாவது இடம் பிடித்தாலும், மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தொகுதிகள் மூன்றாம் இடம் பிடத்தது. (முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் ஜெயலலிதா இருக்கும்பேது அப்படியே அ.தி.மு.க.விற்கு விழும் என்பது குறிப்பிடத்தக்கது) காரணம், அங்குள்ள முக்கிய நிர்வாகிகளே மறைமுகமாக தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதே போல்¢, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் வேட்பாளர் சந்திரமோகனுக்கு நல்ல பெயர் இருந்தும், இரண்டாம் இடத்தைப் பிடித்தார். காரணம் முக்கிய நிர்வாகிகள் கே.என்.நேருவிடம் விலை போய்விட்டனர். இவர்களுடைய விபரத்தை எல்லாம் உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிசாமி ‘நோட்’ எடுத்து வைத்திருக்கிறாராம்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து சில காரணங்களை நேரடியாக கேட்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது தவறாக விளக்கம் கொடுப்பவர்களிடம், ‘அங்கு நடந்தது இதுதான்…’ என்று ‘நோட்’டை தூக்கிப் போட ஆயத்தமாகி வருகிறாராம். அதே சமயம், இதே நிலை நீடித்தால் 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பது கஷ்டம். மீண்டும் தி.மு.க. வந்தால், அடுத்து அ.தி.மு.க. என்ற இயக்கம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் எடப்பாடியிடம் எச்சரித்திருக்கிறார்கள்.
எனவே, கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகிவிட்டார் எப்பாடி பழனிசாமி. தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அதிரடி மாற்றங்கள் இருக்கும். காரணம், ஜெயலலிதாவைப் போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக மூன்று மேயர்களை தூக்கி சீனியர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். எனவே, எடப்பாடியும் அதிரடியில் இறங்கினால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்’’ என்றார்.