செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா கடந்த வாரம் மேயர் பதவியில் இருந்து விலகிய நிலையில், புதிய மேயரை இன்று தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கவுன்சிலர் அம்பிகா தனபால், நிவேதா சேனாதிபதி ஆகியோரில் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 10ஆண்டுகள் திமுவிற்கு தொடர்ந்து இறங்குமாக இருந்தது. இரண்டு சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தோல்வியை தழுவியது. 2019ஆம் ஆண்டிற்கு பிறகே திமுகவிடம் வெற்றியானது கிட்டியது. இதனை தொடர்ந்தே நாடாளுமன்ற தேர்தல் முதல் சட்டமன்ற தேர்தல் வரை அடுத்தடுத்து 9 வெற்றிகளை பெற்றுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநாகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஆனால் திமுகவிற்கு தலைவலி கொடுக்கும் வகையில் நெல்லை மாநாகராட்சி இருந்து வந்தது. ஆரம்பத்தில் இருந்து மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் மோதல் நீடித்தது. பல முறை திமுக மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தாலும் நிலைமை சீரடையவில்லை.

இதனையடுத்து தான் நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் கோவை மேயர் கல்பனாவும் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகளில் 96 இடங்களில் கைப்பற்றியது திமுக கூட்டணி. பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து அங்கு மேயர் பதவியை பிடித்த மூத்த தலைகள் முட்டி மோதியது. ஆனால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா என்பவருக்கு மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் அமைதி காத்து வந்த கல்பனா போகப்போக சர்ச்சையில் சிக்க தொடங்கினார். குறிப்பாக மேயருக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்தார். இதனையடுத்து மேயரின் தாயாரின் வீட்டுக்கு அருகில் இருப்பவருக்குத் தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டுவதாகவும் மேயர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் பல ஒப்பந்தம் வழங்கியதில் பணம் வாங்குவதில் குறியாக இருந்ததாக புகார் வாசிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை நகரில் பல இடங்களில் திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கியிருந்தது. குறிப்பாக மேயரின் சொந்த வார்டிலேயே திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றிருந்தன. இதனால் திமுக தலைமை கல்பனா மீது அதிருப்தி அடைந்தது. இதனையடுத்து தான் கல்பனா ராஜினாமா செய்தததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று கோவை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்கபடவுள்ளது. எனவே கோவை மாநகராட்சியில் யாரை அடுத்த மேயராக நியமிக்கலாம் என பட்டியலை திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரையே மீண்டும் கோவை மேயராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .மேயர் ரேசில் முதல் ஆளாக அம்பிகா தனபாலுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக நிவேதா சேனாதிபதியும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓகே சொல்லும் நபரே மீண்டும் கோவை மேயராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal