பிரஜ்வல் ரேவண்ணா மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு வழக்கில் ஏற்கனவே போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பின்னர் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து, பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவான பலாத்கார வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர் போலீசார் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தன் மீதான பலாத்கார வழக்கில் முன்ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.