விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., வகித்த மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டார்.

அதோடு அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் 7 அமைச்சர்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பணிகளை உற்சாகமாக தொடங்கி பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர். இதனால் வேட்பாளரை இறுதி செய்வதில் அ.தி.மு.க. தலைமையில் இழுபறி நீடிக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் உயர்மட்டக்குழு கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொறுளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமூக நீதி பேரவை தலைவர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே சமயம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைந்தவுடன், இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 தினங்களாகியும், பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை வெளியிடாமலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிட உள்ளது என்று அறிவிக்காமலும் மவுனம் காத்து வருகிறது. இதனால் அந்த கூட்டணியில் உள்ள பா.ம.க., தனது வேட்பாளரை நிறுத்த தயாராக உள்ள போதும், தேர்தல் பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகிறது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal