நடிகை நமீதா தான் முதன் முறை கர்ப்பமானபோது நான்கே மாதங்களில் கர்ப்பம் கலைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
கோலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நமீதா. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சியாக நடித்து பேமஸ் ஆன நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. இதனால் சின்னத்திரை பக்கம் சென்ற நமீதா, அதில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். அதுமட்டுமின்றி அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தார் நமீதா.
இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நமீதா, அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு தன்னுடைய காதலனான நடிகர் வீராவை கரம்பிடித்தார். திருமணமாகி நான்கு ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த நடிகை நமீதாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை வளர்ப்பதில் தற்போது பிசியாக உள்ள நமீதா, அண்மையில் அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக வதந்தி பரவியது.
பின்னர் அது துளியும் உண்மையில்லை என விளக்கம் அளித்த நமீதா, தன் கணவருடன் சேர்ந்து ஜோடியாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தன்னுடைய கர்ப்பகாலம் பற்றியும், அப்போது தான் சந்தித்த கஷ்டங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதன்படி, சூரத்தில் பெற்றோர் வீட்டில் இருந்தபோது தான் கர்ப்பமாக இருப்பது நமீதாவுக்கு தெரியவந்ததாம். உடனே அவரது கணவர் வீராவும் இங்கிருந்து கிளம்பி சூரத் சென்றிருக்கிறார்.
மூன்று மாதத்தில் இரட்டை குழந்தைகள் என்பதை மருத்துவர்கள் சொன்னார்களாம். அதுமட்டுமின்றி இரட்டைக் குழந்தைகள் என்பதால் உடல் எடை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் முழு நேரமும் ரெஸ்டில் தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்களாம். அதனால் நடக்கவே கூடாதுனு அவரது கணவர் வீராவும் கண்டிஷன் போட்டுவிட்டாராம். இப்படி கண்டிஷன் போடுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், திருமணமான நான்கே மாதத்தில் நமீதா முதன்முறை கர்ப்பமானாராம். ஆனால் அந்த கர்ப்பம் நான்கு மாதத்தில் கலைந்துவிட்டதாம். அந்த சமயத்தில் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் பின்னர் தான் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் நமீதா கூறி இருக்கிறார்.