தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பில் கலந்துகொண்ட அமித்ஷா மேடையிலேயே தமிழிசையை எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தென்சென்னையில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக சில கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜகவிலேயே சமூக வலைதளப் பிரிவினர் சொந்த கட்சித் தலைவர்களையே விமர்சிப்பதாக குற்றம் சாட்டியதுடன் முன்னாள் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தனர். இன்னொரு பக்கம் அண்ணாமலைக்கு எதிராக வேறு சில பாஜக நிர்வாகிகளும் பகிரங்கமாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் மோதல் தொடர்பாக டெல்லி பாஜக மேலிடம் தமிழக பாஜக தலைவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மேடை ஏறிச் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தார். தம்மை கடந்து சென்ற தமிழிசையை அழைத்து சில நிமிடங்கள் அமித்ஷா கண்டிப்பான குரலில் கை விரல்களை உயர்த்தியபடி பேசினார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் தொடர்ந்து அமித்ஷாவிடம் விளக்கம் கொடுத்து வந்தார்.

சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்ற மேடையில், தமிழிசையிடம் தமிழக பாஜக மோதல் நிலவரம் தொடர்பாகவே அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தினார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷாவின் அதிருப்தியை தொடர்ந்து தமிழிசை தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ‘இனி தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மட்டும்தான் பேட்டி தருவேன்; விமான நிலையம் உள்ளிட்ட போகிற வருகிற இடங்களில் எல்லாம் பேட்டி தரமாட்டேன்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal