நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்து அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மீளாத நிலையில், ‘அணிகள் இணையவேண்டும்’ என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. நேற்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அதிலும் இந்த முறை அதிமுக அதிக இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக.9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும் சென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் சரி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க. எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி பழனிசாமி கேட்காத நிலையில், இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கோடிகளை இழந்து தெருக்கோடிகளில் நிற்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால் அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். யாரை எதிர்த்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியை ஆரம்பித்தார்களோ அவர்கள்தான் தமிழகத்தை ‘குஷியாக’ ஆண்டு கொண்டிருப்பார்கள் என முடிவெடுத்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ‘அ.தி.மு.க. அணிகள் இணையவேண்டும்’ என எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிக்கு வருகிற திங்கட்கிழமை செல்ல இருக்கிறாராம்.
இது பற்றி கு.ப.கிருஷ்ணன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தீய சக்தி தி.மு.க.விற்கு எதிராக பல போராட்டங்களையும், தியாகங்களையும் கடந்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும், அது உடனடியாக சரி செய்யப்பட்டு, மீண்டும் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை ஜெயலலிதா வெற்றிகரமாக வழிநடத்தினார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவும் இரண்டுமுறை தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வராக பதவியேற்றார்.
தமிழகத்தல் இப்படி வரலாற்று சாதனைகள் படைத்த அ.தி.மு.க. என்ற இயக்கம் இன்றைக் படுபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, மீண்டும் அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக உருவெருக்க அணைவரும் ஒன்றிணைய வேண்டும். எனவேதான், எங்கள் அண்ணன் தலைமையில் வருகிற திங்கட்கிழமை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு செல்ல இருக்கிறோம்’’ என்றனர் ஆவேசத்துடன்.
அ.தி.மு.க.வினர் அணைவரும் ஒன்றிணைந்து செயல்பட அனைவருக்கும் நல்ல அருளாசியை வழங்கவேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர்., ஜெ.சமாதிக்கு செல்கிறாராம் கு.ப.கி. இந்நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள காத்திருக்கிறார்களாம்.
ஏதோவொரு வகையில் அ.தி.மு.க.விற்கு விடிவுகாலம் பிறந்தால் சரிதான்..!