அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 ஆவது முறை வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘‘நாட்டு மக்கள் பா.ஜ.க கூட்டணி மீதும், பிரதமர் மோடி அவர்களின் மீதும் வைத்திருந்த நம்பிக்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றி வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும், வாக்கு சேகரித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுகள், வாழ்த்துகள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 ஆவது முறை வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியினரின் கடின உழைப்பும், தேர்தல் பரப்புரையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கின்றன. மிக முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடியின் தன்னம்பிக்கையான, துணிச்சலான நடவடிக்கைகள், ஆட்சியில் மேற்கொண்ட நல்ல பல திட்டங்கள், கொரோனா காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

அதாவது 10 ஆண்டுகால பா.ஜ.க வின் ஆட்சிக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான ஒரு கூட்டணியின் வெற்றிக்கு, ஆட்சிக்கு இந்திய மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அகில இந்திய அளவிலே காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியினுடைய பொய்யான பரப்புரையை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியா கூட்டணிக்கு தோல்வியை தந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வாக்கு சேகரித்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முதல், தொண்டர்கள் வரை அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்து, உழைக்கின்ற பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் மீண்டும் நல்லாட்சி அமைய தமிழ் மாநில தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal