மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறியவர்கள், இரண்டு கட்டத் தேர்தலுக்குப் பிறகு ‘இண்டியா’ கூட்டணியும் வெற்றி பெற வாய்ப்புண்டு என்றார்கள். ஒரு சிலர் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றார்கள்.

ஆனல், இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இறுதி கட்ட நிலவரத்தை புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் 6 கட்டம் முடிந்துவிட்ட நிலையில், கடைசிக் கட்ட லோக்சபா தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையே பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் லோக்சபா தேர்தல் குறித்துக் கடந்த சில நாட்களாகவே பல முக்கிய கருத்துகளைக் கூறி வந்தார். அப்படி அவர் கடந்த சில நாட்களாக லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்துக் கூறிய சில முக்கிய கருத்துகள் குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2019ஐ காட்டிலும் பாஜக அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியது முதல் விஷயம்.. சமீபத்தில் ஒரு செய்தி சேனலில் பேசிய அவர், 2019 லோக்சபா தேர்தலைக் காட்டிலும் இந்த முறை பாஜக சிறப்பாகச் செயல்படும் என்று கூறியிருந்தார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், அதைக் காட்டிலும் இந்த முறை பாஜக சிறப்பாகச் செயல்படும் என்று கூறியிருந்தார். பிரசாந்த் கிஷோர் சொன்னது போல இந்த முறை கூடுதல் இடங்களைப் பெறுமா என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.

பிரசாந்த் கிஷோர் சொன்ன மற்றொரு முக்கிய பாயிண்ட் தென் மற்றும் கிழக்கு மாநிலங்கள் பற்றியது. கடந்த முறையைக் காட்டிலும் தென் மாநிலங்களில் பாஜக கூடுதல் இடங்களைப் பெறும் என பிகே கூறியிருந்தார். ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் பாஜக கூடுதல் இடங்களில் வெல்லும் என்றும் அதன் வாக்கு வங்கியும் அதிகரிக்கும் என்றும் பிகே கூறியுள்ளார்.

அதேபோல உத்தரப் பிரதேசம் குறித்தும் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உபி குறித்து அவர் பேசுகையில், “உத்தரப் பிரதேசத்தில் கடந்த தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜுன் சமாஜ் இணைந்து போட்டியிட்டது. இருந்த போதிலும் 2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது வெறும் 9 தொகுதிகள் மட்டும் பாஜக குறைவாக வென்றது.

இப்போது இரு தரப்பும் தனித்தனியாகவே போட்டியிடுகிறது. அப்படியிருக்கும் போது பாஜக அங்குக் குறைந்தது 40 முதல் -50 இடங்களை இழந்தால் மட்டுமே அது பெரிய இழப்பு எனச் சொல்ல முடியும். ஆனால், தற்போதுள்ள சூழலில் அப்படியொரு நிலைமை இருப்பது போலத் தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இரு பிரிவாக இருக்கும் நிலையில், என்டிஏ கூட்டணி அங்குப் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று பலரும் கூறியிருந்தனர். இருப்பினும், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இப்போது பாஜகவிடம் 22 சீட்கள் இருக்கும் நிலையில், இதைத் தாண்டி பாஜக சீட்கள் இழக்க வாய்ப்பு குறைவு என்று அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் பாஜக பல தொகுதிகளில் தோல்வியடையும் எனக் கூறப்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் இது குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது அவர் கூறுகையில், “ராஜஸ்தான், ஹரியானா தொகுதிகளில் பாஜக அதிகபட்சம் 2 முதல் 5 தொகுதிகளை இழக்கலாம். ஆனால், இது பாஜகவின் வெற்றியைப் பெரியளவில் பாதிக்காது. மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் பாஜக 50 இடங்களில் கூட இழக்காது. ஒரு சில இடங்களில் தோல்வி அடைந்தாலும் கூட அந்த இடங்களைக் கிழக்கு மற்றும் தென் இந்தியாவில் இருந்து ஈடுகட்டிவிடும்” என்றார்.

பிரசாந்த் கிஷோர் கூறிய இந்த முக்கிய மான பாஜகவுக்குச் சாதகமாகவே இருக்கிறது. அதேநேரம் இந்தத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது.

பிரசாந்த் கிஷோர் பி.ஜே.பி.க்கு ஆதரவாக பேசி வருகிறார் என்று எல்லோரும் கூறி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கடந்த முறை ‘இண்டியா’ கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்தவர். வரவிருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் பி.கே. ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal