‘தமிழகத்தில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் எனும் ஏழை மக்களின் கனவை நினைவாக்க முயலும் பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ஊழல் நடப்பதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் சொந்த வீடு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருங்கனவு. சுதந்திர இந்தியாவை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் அந்தக் கனவு நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு செயல்படுத்தப்பட்ட ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ அதாவது பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் சொந்த வீடு கனவு நனவானது.
ஏற்கனவே இருந்த ‘இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்’தில் நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை மத்திய பாஜக அரசு மேற்கொண்டது. நகரங்களில் வீடு கட்டும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கும் நடுத்தர மக்களுக்கும் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்பட்டன. இதனால்தான் இத்திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற முடிந்தது.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சத்து 77 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகம் பயனடைந்த மாநிலங்களில் முன்னணியில் இருக்கிறது தமிழ்நாடு.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை தமிழக அரசு அதிகாரிகள் சிலர் மோசடி செய்து விட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இது தொடர்பாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்புத்துறை) காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 2016 முதல் 2020-ம்ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஏற்கெனவே சொந்த வீடுகள் உள்ளவர்கள், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் பலருக்கு வீடுகள் கட்டப்பட்டதாக கணக்கு காட்டி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை முறைகேடாக பெற்றுள்ளனர். வீடுகளை முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே பணிகள் முடிந்ததாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதிகாரிகளின் துணையுடன் நிதி பெற்றுள்ளனர்.
நல்ல நோக்கத்திற்காக, மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தில் சாதாரண அப்பாவி மக்களை ஏமாற்றி அரசு அதிகாரிகள் நிதி மோசடி செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் தவறு செய்த அதிகாரிகள் அனைவரையும் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இது வேலியே பயிரை மேய்ந்ததற்கு ஒப்பானது.
மேலும் 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்ற பிறகு தற்போது வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் பயன் பெற்றார்கள்? முறையாக பயனாளிகளுக்கு அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது குறித்தும் தமிழக அரசு முழுமையான விளக்கத்தை தர வேண்டும். ஏனென்றால் கடந்தஅண்ணா திமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டது போல, 2021- ல் திமுக அரசு பதவி ஏற்ற பிறகும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இத்திட்டத்தில் நடைபெறும் ஊழலால் சொந்த வீட்டை அடைய வேண்டும் என்று கனவை அடைய முடியாமல் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற முறைகேடுகளால் உண்மையிலேயே யாருக்கு வீடுகள் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போய் இருக்கிறது. இது மிகப்பெரிய அநீதி. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் விசாரணையை விரைவுப்படுத்தி முறைகேடுகள் செய்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சி தலைவர்கள் இது குறித்து முழுமையாக கண்காணித்து ஊழல் நடக்காமல் பொதுமக்கள் அனைவரும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் வரவு வைக்கும் பிரதமர் மோடியின் திட்டத்திலும் இதுபோல தமிழகத்தில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டது.
இதுபோல மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் கிராம மேற்பாட்டு திட்டங்களில், ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மத்திய அரசு திட்டங்களை கண்காணித்து நடைபெற படுத்த வேண்டிய தமிழக அரசு இதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது பிரதமர் வீட்டு வசதி திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. இது மன்னிக்கவே முடியாத குற்றம். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தால் தான் இது போன்ற தவறுகளை இனி நடக்காமல் தடுக்க முடியும். இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்கக் கூடாது.
இனி எதிர்காலத்தில் ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மத்திய,மாநில அரசு திட்டங்களில் ஊழல் என்பது கடுமையான கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு இதில் ஈடுபடுவோர் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தின் ஆட்சித் தலைவரிடம் அரசு திட்டங்களில் அஜாக்கிரதையாக செயல்பட்டது குறித்து விசாரணை நடத்துவதும், ஊழல் நடக்காமல் அரசு திட்டங்களை செயல்படுத்துவதின் அவசியம் குறித்து உரிய வழிமுறைகளையும் உருவாக்குவது தான் இதற்கு சரியான தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.