பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பி.டி.ஜ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் இந்தியக் கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. 272- க்கு மேல் மிக அதிகமான இடங்களை பெறுவோம். இந்தியா கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்த 48 மணி நேரத்துக்குள் பிரதமரை இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும். 2004- ல் மன்மோகன் சிங்கை 3 தினங்களுக்குள் பிரதமராக தேர்வு செய்தோம். தற்போது 48 மணிநேரத்திலேயே முடிவு செய்து விடுவோம்.

இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சி பிரதமர் பதவிக்கு தானாகவே உரிமை கோரும். இந்தியா கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்கள் அணிக்கு வரலாம். அப்போது அந்த கட்சிகளை சேர்ப்பதா? இல்லையா? என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும். மக்கள் ஆதரவை பெற்ற இந்தியா கூட்டணி அரசு நிலையாக இருக்கும். வெளிப்படையாக பதில் அளிக்கக் கூடிய மற்றும் பொறுப்பான அரசை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வெற்றியின் போது பெரிய மனதுடன் இருப்போம். பழி வாங்கும் அரசியல் இருக்காது. ஓய்வுக்கு பிறகு அவர் (மோடி) வாழ்க்கை எப்படி இருக்க போகிறது. தியானம் செய்யப் போகிறார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எங்கள் நிலை மேம்படும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.  இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். பல்வேறு மாநிலங்களில் காங்கிரசுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. வெவ்வேறு உத்திரவாதங்கள் அளிக்கப்பட்டன. இது இந்தியா கூட்டணியை மேம்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal