வேலூரில் அழகிய இளம்பெண் ஒருவர் தனது அழகில் கிறங்கிய சென்னை தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம், செல்போன்கள், கார் ஆகியவற்றை பறித்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாவித் சைபுதீன்.. 32 வயதாகிறது. பர்மா பஜாரில் சொந்தமாக எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கிறார். அதாவது, வெளிநாடுகளில் இருந்து செல்போன் போன்ற பொருட்களை, மொத்தமாக வாங்கி, இங்கு விற்பனை செய்து வருகிறார். ஜாவித்துக்கு திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், ஒருநாள் ஜாவித்துக்கு இளம்பெண் ஒருவர் போன் மூலம் அறிமுகமாகி உள்ளார். ஜாவித் செல்போனுக்கு, அடிக்கடி மெசேஜ் அனுப்பிய அந்த பெண், பிறகு வாட்ஸ்அப் காலிலும் பேச துவங்கினார். ஒருகட்டத்தில் ஜாவித்தும் அந்த பெண்ணிடம் இயல்பாக பழகினார். இந்த நட்பு காதலாக மாறியது.

ஆனால், அந்த பெண்ணின் போட்டோவைகூட ஜாவித் இதுவரை பார்த்தது இல்லை.. எப்போது போட்டோ கேட்டாலும், அந்த பெண் போட்டோ அனுப்ப மாட்டாராம். நேரிலேயே சந்திக்கலாம் என்று அந்த பெண் சொல்லி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஜாவித்துக்கு போன் செய்த அந்த பெண், பட்டினப்பாக்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால், நேரில் சந்திக்கலாம் என்று அழைத்துள்ளார். இதைக்கேட்டதும் ஜாவித்துக்கு குஷியாகிவிட்டது.
முதல்முறையாக அந்த பெண்ணை நேரில் பார்க்க செல்வதால், தன்னுடைய காரை எடுத்து கொண்டு, அந்த பெண் சொன்ன அதே இடத்துக்கு அவசர அவசரமாக கிளம்பி போனார்.

அப்போது, கார் ஒன்றில் அந்த பெண் உட்கார்ந்திருந்தார்.. அந்த பெண்ணை பார்த்ததுமே ஜாவித்துக்கு அளவில்லாத மகிழ்ச்சியாகிவிட்டது. ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே, காருக்குள் 4 பேர் ஏறினார்கள். ஜாவித்தை மிரட்டி, கத்திமுனையில் அங்கிருந்து அதே காரில் கடத்தி சென்றிருக்கிறார்கள். அவரிடமிருந்த 2 செல்போன், காதலிக்காக செலவு செய்ய வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் என மொத்தத்தையும் பறித்து கொண்டனர்.

உயிரோடு விட வேண்டுமானால், ரூ.50 லட்சம் பணம் வேண்டும், இல்லாவிட்டால், இங்கேயே கொன்றுவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ஜாவித், கேட்ட பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொல்லி, தன்னுடைய மனைவிக்கு போன் செய்திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வந்திருப்பதால், அவசரமாக ரூ.50 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார்.

ஆனால், உடனடியாக 50 லட்சம் சாத்தியமில்லை என்பதால், 2 தவணையாக 50 லட்சம் ரூபாயை அந்த கும்பலுக்கு தந்துள்ளார் ஜாவித்.. இந்த 2 தவணை பணமும் முழுமையாக கிடைக்கும்வரை, ஜாவித்தின் காரையும் அந்த கும்பல் பறித்து வைத்து கொண்டது. மேலும், அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்களையும் எடுத்து வைத்து கொண்டது. 50 லட்சம் ரூபாயையும் முழுமையாக பெற்றுக்கொண்ட அந்த கும்பல், இந்த விஷயத்தை வெளியே சொன்னால், போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவோம் என்று சொல்லி மிரட்டிவிட்டு போனது.

இதற்கு பிறகுதான், அந்த கும்பலிடமிருந்து தப்பிய இளம் தொழிலதிபர் ஜாவித், நண்பர்களிடம் விஷயத்தை சொல்லி உள்ளார்.. அவர்கள் தந்த அறிவுரைப்படி, மயிலாப்பூர் போலீசிலும் புகாராக அளித்தார். இதையடுத்து போலீசாரும், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும், இளம் பெண்ணின் செல்போன் நம்பரை வைத்தும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த பெண்ணின் பெயர் சோனியா என்பதும், 26 வயதான அவர் வேலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஜாவித் தொழிலபதிபர் என்பதால், தன்னுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ரூ.50 லட்சம் பணம் பறித்ததும் உறுதியானது. இதையடுத்து, உடனடியாக வேலூருக்கு சென்ற போலீசார், அங்கே பதுங்கியிருந்த சோனியாவை அதிரடியாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடந்துள்ளது.

அப்போதுதான், ஜாவித் போலவே பல பணக்கார இளைஞர்களை இப்படி கடத்தி சென்று பணம் பறித்திருப்பதை சோனியா தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லி உள்ளார். ஆனால் அந்த ஆண் நண்பர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களை பற்றி சோனியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal