திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் திமுக முகவர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்து, ஜூன் 4ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் வெளியாகும் தேர்தல் முடிவுக்காக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஜூன்1ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்ந கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில், டெல்லியில் ஜூன் 1ம்தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் எடுத்துரைக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும், ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், ஜூன் 4ம் தேதி நடக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என இந்த 3 விஷயங்கள் குறித்தும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal