யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் தாயார் செல்வி சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு ஶ்ரீமதி குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி, பள்ளி விடுதியில் உயிரிழந்தார். ஶ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக விசாரணைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது ஶ்ரீமதியின் தாயார் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சவுக்கு மீடியா யூ டியூப் சேனலில் கள்ளக்குறிச்சி விவகாரம் – மர்மம் அவிழ்க்கும் சவுக்கு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டார்.

அதில் என் மகள் குறித்தும் என்னைப் பற்றியும் என் குடும்பத்தினர் பற்றியும் உண்மைக்கு மாறான விஷயங்களை சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அப்போது சவுக்கு சங்கர் பேசியதன் பின்னணிக்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. தற்போது சவுக்கு சங்கரின் உதவியாளர் பிரதீப் என்பவர் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் பணம் பெற்றுக் கொண்டுதான் சவுக்கு சங்கர் மகள் ஶ்ரீமதி குறித்தும் என் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆதாரமாக வைத்து சவுக்கு சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஶ்ரீமதியின் தாயார் செல்வி அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார். யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை இழிவாகப் பேசியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் கஞ்சா வழக்கிலும் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்த வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஶ்ரீமதியின் தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal