“தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் இருகட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மதம் மற்றும் வகுப்புவாத ரீதியில் பிரச்சாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.

அதேபோல் காங்கிரஸுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்படலாம் என்பது போன்ற தவறான கருத்துகளை பிரச்சாரத்தில் சொல்லக்கூடாது. அக்னி வீரர் திட்டம் குறித்து பேசும்போது நாட்டின் பாதுகாப்பு படைகளை அரசியலாக்கக் கூடாது” என்று கூறியுள்ளது.

மேலும், “தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது” என்று இருகட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்டியுள்ளது.

அதேநேரம், இரு கட்சிகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நேரத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுக்கும் வரம்பற்ற வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal