சென்னையில் பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு மூலம் புகார் வந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வராணி குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கு 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (70) என்ற முதியவர் சிக்கினார். பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபச்சார பெண் தரகர் நதியா (37) அந்த சிறுமியை அனுப்பி வைத்ததாக கூறினார். இதனையடுத்து நதியா அவரது சகோதரி சுமதி உள்ளிட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

பெண் புரோக்கரான நதியாவின் மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் பள்ளியில் படிக்கும் அழகான ஏழ்மையான மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வரும்படி தனது மகளிடம் நதியா கூறியுள்ளார்.

அதன்படி அவரது மகளும், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று அழைத்து வந்துள்ளார். அப்போது நதியா, மாணவிகளிடம் அவர்களின் பெற்றோர்கள் குறித்த விபரங்களை கேட்டு தெரிந்து கொள்வார். அதில் தாயுடன் தனியாக இருக்கும் மாணவிகள் மற்றும் வீட்டின் வறுமையால் பள்ளி படிப்பு முடிந்து பகுதி நேரமாக வேலை செய்யும் மாணவிகளை குறிவைத்து, அவர்களுக்கு செலவுக்கு ரூ.500 மற்றும் ரூ.1000 கொடுத்து வசதியாக வாழலாம் என்று கூறி மூளை சலவை செய்து நதியா பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார்.

12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார். பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக இதில் வயதான நபர்களே அதிகம் என கூறப்படுகிறது. சிறுமிகளை கேட்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 முதல் ரூ.35 ஆயிரம் வரை ஒரு இரவுக்கு விலை பேசி தனது சகோதரி கணவர் ராமச்சந்திரனுடன் ஆட்டோவில் அனுப்பியுள்ளார். அந்த வகையில் நதியா மாணவிகளை கடந்த ஓராண்டாக பலரிடம் அனுப்பி பணம் சம்பாதித்து கார் உள்ளிட்டவை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

போக்சோ சட்டத்தின் கீழ், பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா(37), அவரது சகோதரி சுமதி(43), சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன்(42), நேபாள நாட்டை சேர்ந்த இளம் பெண் மாயா ஒலி(29) மற்றும் பள்ளி மாணவிகள் என்று தெரிந்து அடிக்கடி பாலியல் உறவு வைத்த அசோக்குமார்(31), சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான புரோக்கர்களிடமிருந்து 7 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal