‘‘மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த முறையை போல் இந்த முறையும் தொகுதிகள் கிடைக்கக்கூடும்’’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‘‘நாம் அடிப்படையை பார்க்க வேண்டும். தற்போதைய அரசு மற்றும் அதன் தலைவர் மீது கோபம் இருந்து அதற்கு மாற்று இருந்தால், யாருக்கு ஓட்டுப் போடுவது என மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக கோபம் உள்ளதாக நாம் கேட்கவில்லை. ஏமாற்றம், நிறைவேறாத கோரிக்கைகள் இருக்கலாம். ஆனால், பரவலான கோபம் உள்ளதாக தெரியவில்லை.
ஒருவர் வந்தால், நமது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைக்கும் போது தான் , ஒருவர் சவால் விட முடியும். ராகுல் வந்தால், தங்களது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைப்பதாக என நாம் கேள்விப்படவில்லை. அவரது ஆதரவாளர்கள் வேண்டுமானால் அப்படி கூறலாம். ஆனால், அடிப்படை மட்டத்தில் இருந்து நான் பேசுகிறேன். அரசுக்கு எதிரான பரவலாக கோபமும் இல்லை. சவால் விடும் அளவுக்கு யாரும் இல்லை. இதனால், எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்கும் என நான் கருதவில்லை.
நாட்டின் மேற்கு, வடக்கு பகுதிகளில் 325 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2014 முதல் பா.ஜ.க, வலுவாக உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 225 தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த காலங்களில் பா.ஜ.க, சிறப்பாக செயல்படவில்லை. 50க்கும் குறைவான எம்.பி.,க்களே உள்ளனர்.
வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பா.ஜ.க,வுக்கு தோல்வி ஏற்படும். ஆனால், அப்படி நடக்கும் என நான் கருதவில்லை. கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பா.ஜ.,வின் ஓட்டும் மற்றும் தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.