‘மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்… மோடி எங்கள் டாடி…’ என்றெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர்கள் கூறிவந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி முழுமையாக முடிந்ததற்கு காரணம் ‘மேலிடம்’தான் என்பதை எல்லோரும் அறிந்தது.

இப்படி ஆட்சியில் இருக்கும் போது, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்து, தமிழகம் திரும்புவார். இவர் செல்லவில்லை என்றால், ‘மணி’கள் ஒருவர் கேரளாவில் இருந்தும், இன்னொருவர் பெங்களூரில் இருந்தும் (தமிழகத்தல் இருந்து சென்றால் தெரிந்துவிடும்) டெல்லிக்கு சென்று காரியங்களை சாதித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கூட பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருந்தது. மோடியின் அருகில் எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மூலமாக எடப்பாடி காங்கிரஸ் மேலிடத்தில் டீல் பேசியிருக்கிறார்.

இந்த டீலை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு வர, திருநாவுக்கரசருக்கு போட்டியிட சீட்டே கிடைக்கவில்லை.

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், ‘தேசிய கட்சிகள் தமிழகத்தை வஞ்சிக்கிறது…’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசினார். ஆனால், காங்கிரசுடன் அ.தி.மு.க. இணக்கமாக செல்லப் பார்க்கிறது என்று அப்போதே அரசியல் பார்வையாளர்கள் விமர்சனத்தை வைத்து வந்தனர்.

இந்தநிலையில்தான் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் ராகுல் காந்தி ஓட்டலில் சாப்பிட்டுகொண்டுள்ளார். அப்போது அங்கு வரும் மக்களிடம் சகஜமாக பேசிய காட்சியானது இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் செல்லூர் ராஜூவின் பதிவிற்கு கீழ் அதிமுக மற்றும் பாஜகவினர் செல்லூர் ராஜூவை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுகவினர் செல்லூர் ராஜூ கருத்தை வரவேற்று பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திட்டவட்டாக கூறிவரும் நிலையில், செல்லூர் ராஜுவின் பதிவு, மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும் என்கிறார்கள் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal