ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி ஒரே கட்டமாக 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் போதும், அதனை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் வரை பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இது தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களால் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கட்டிடங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 கம்பெனி துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடு-பாஜக- ஜனசேனா கூட்டணிக்கும் இடையே நடந்த இந்த இருமுனைப் போட்டியில் ஜெகன் கட்சி மோசமான படுதோல்வியை சந்திக்கும் என ஏற்கெனவே அரசியல் ஆலோசகரும், விமர்சகருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஜயவாடாவில் ஐ-பேக் நிறுவனம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற ஜெகன், அதன் உரிமையாளர் ரிஷியையும், அவரது குழுவினரையும் புகழ்ந்து தள்ளினார். இவர்களின் தேர்தல் கணிப்பு மிக சரியாக இருக்கும் என்றும், பிரசாந்த் கிஷோரை விட ரிஷியே துல்லியமான கணிப்பை தருகிறார் என்றும் அவரை பாராட்டினார்.
இதற்கிடையில் டெல்லியில் நேற்று பிரசாந்த் கிஷோர் பேசுகையில், “ஆந்திராவை பொறுத்தவரை, ஜெகன் கட்சி இம்முறை மோசமான படுதோல்வியை சந்திக்கும். இதுதான் அக்கட்சியினரை கலவரப்படுத்துகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராவது நிச்சயம்” என்றார். அவரின் இந்த கருத்து ஆந்திராவில் ஜெகன் கட்சியினரின் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது.