கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் எனவும், இதனால் குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்றும் எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்தன. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கள்ள மவுனம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என்பதை காவிரி பிரச்னையில் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் பிரச்னைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துள்ளன என்றும் விமர்சித்தார்.

கள்ள மவுனம் வாசகத்துக்கு மறு உருவம் பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல என்றும், காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமிதான் என்றும் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து, “தமிழக அரசைப் பொருத்தவரை, காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும்போதெல்லாம் அதை அரசியல்ரீதியாக, மத்திய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடுமையாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு என்பதுதான் உண்மை” என்றும் சுட்டிக்காட்டினார்.

அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாற்றின் உபநதி சிலந்தி ஆறு ஆகும் என்ற துரைமுருகன், “இதைப் பொருத்தவரை, சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி உள்ளனர்” என சுட்டிக்காட்டினார்.

மேலும், “இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து, தமிழகத்தின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழக அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal