‘‘கட்சிக்குள் எந்தப் பிரச்னை என்றாலும், எங்களிடம் கலந்து ஆலோசித்த பின்பே பழனிசாமி முடிவு எடுக்கிறார். 2026ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’’ என்று அ.தி.மு.க., தலைமை நிலையச்செயலர் வேலுமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில், நேற்று எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில், ‘‘ பில்லூர் மூன்றாவது குடிநீர்த் திட்டத்தை, எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம்; அதை இன்னும் முடிக்கவில்லை. வேகமாக அதை முடித்து, குடிநீர் வினியோகத்தைச் சீராக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பின்பு, அ.தி.மு.க.,வுக்கு வந்த பல்வேறு சோதனைகளை வென்று, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியது பழனிசாமி தான். அதனால் அவருடைய தலைமையை ஏற்றுள்ளோம். நான்காண்டு, இரு மாதங்கள் அவர் அற்புதமாக ஆட்சி நடத்தினார்.

கோவையில் இப்போது செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தது தான். மீண்டும் பழனிசாமி ஆட்சி வர வேண்டுமென்று, தமிழக மக்கள் விரும்புகின்றனர்; அந்த விருப்பம், லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும்.

வரும் 2026 தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, பழனிசாமி மீண்டும் முதல்வராவார். விடுபட்ட பல திட்டங்களை, அப்போது நாங்கள் நிறைவேற்றுவோம். கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியவர்கள் வெளியே போய் விட்டனர்’’ என்று பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal