தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருப்பவர் தினேஷ் குமார். இவரது தந்தை டி.வி.ரவி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் கடந்த 12.05.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இயற்கை எய்தினார். அவருக்கு ஆர்.சுமதி என்ற மனைவியும், மகன் ஆர்.தினேஷ்குமார், முதல்வரின் தனிச் செயலாளராக உள்ளார். மருமகள் ஆர்.ஐஸ்வர்யா,மகள் ஆர்.திவ்யா, மருமகன் பி.செல்வகுமார் ஆகியோர் உள்ளனர்
டி.வி. ரவி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீடு திரும்பிய அவர் இயற்கை எய்தினார்.மறைந்த டி.வி.ரவி அவர்கள் மறைவுக்கு முதலமைச்சரின் மருமகன் சபரீசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘‘தன்னை வளர்த்து சான்றோனாக்கிய தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் ஆற்றிட முடியாத துயரம்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில்தான் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது தங்கையும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி. ஆகியோர் தினேஷ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal