பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூ டியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கருத்துகளை கூறி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் அரசு வேலையில் இருந்து யூடியூப்பராக மாறியது எப்படி.? பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த சில வருடங்களில் வாங்கி இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையா என்பதை தற்போது பார்க்கலாம். திருச்சியை பூர்விகமாக கொண்டவர் ஆச்சிமுத்து சவுக்கு சங்கர், இவரது தந்தை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் உதவியாளராக இருந்தார்.

இவரது மறைவை அடுத்து கருணை அடிப்படையில் 1991ஆம் ஆண்டு அரசு பணியில் இணைந்தார் ஆச்சிமுத்து சங்கர், சில வருடங்களுக்கு பிறகு காவல் துறை உயர் அதிகாரிகளின் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்டு அதனை வெளியிட்டு சிக்கிக்கொண்டார் சங்கர். இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் முதன் முறையாக 2008&ல் சிறைக்கு சென்றார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் ‘சவுக்கு’ என்ற இணையதளம் தொடங்கி காவல் துறையில் நடைபெறும் அத்துமீறல்களை எழுத தொடங்கினார். சிறிது நாட்களில் பெண் செய்தி வாசிப்பாளர் தொடர்பாக தனிப்பட்ட கருத்தை எழுதிய காரணத்தால் அந்த இணையதளத்தை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து அரசியல் விமர்சகர் என்ற பெயரில் அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்து தொலைக்காட்சி மற்றும் யூடியூப்பில் கருத்து தெரிவித்தார்.

திமுக ஆட்சி வருவதற்கு முன்பு அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த சவுக்கு சங்கர், 2021ஆம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுகவிற்கு எதிராக திரும்பினார். முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி என அனைவரையும் ஒருமையில் விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் நீதிபதிகள் தொடர்பாக அவதூறாக பேசியவரை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை 2022ஆம் ஆண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெளியே வந்த சவுக்கு சங்கர் திமுக தான் தனது எதிரி என்ற நிலைப்பாட்டை எடுத்து யூடியூப் சேனலில் விமர்சித்து வந்தார். தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி சிஇஓவாகவும் பொறுப்பேற்றார். இந்த காலகட்டத்தில் தான் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக விமர்சித்த வழக்கில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து எப்போ மாட்டுவார் என காத்திருந்த தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு அல்வா போல் பாயிண்ட் சிக்கியதால் கோவை போலிசாரால் முதலில் கைது செய்யப்பட்டவர் அடுத்தடுத்து சென்னை, சேலம், திருச்சி, தேனி என பல ஊர்களிலும் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் பல கோடி ரூபாய்க்கு அடுக்குமாடி குடியிருப்புக்கள் வாங்கியுள்ளதாக பட்டியலும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

அதில், மதுரவாயிலில் வீடு, தியாகராய நகரில் 2840 சதுர அடியில் வீடு, ஆர் ஏ புரத்தில்ceebros greyshot சொகுசு இல்லம், 3500 சதுர அடியில் மேத்தா நகரில் வீடு, மேலும் 8600 சதுர அடியில் நிலத்தோடு கொட்டிவாக்கத்தில் வீடு என சவுக்கு சங்கர் பல பெயரிகளில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் சவுக்கு சங்கருக்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தவிர, தி.மு.க.விலும் முக்கிய புள்ளிகள் சவுக்கு சங்கருக்கு மறைமுகமாக ‘பெரிய அளவில்’ உதவிகள் செய்வதாகவும் செய்திகள் உலா வந்தன!

அரசு பதவியில் கிளர்க்காக இருந்து யூடியூப்பராக மாறியவர் பல கோடி சொத்து குவித்தது எப்படி என சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சவுக்கு சங்கர் சொத்து தொடர்பான வெளியாகியுள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மை என கண்டறியப்படவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal