‘பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கண்டிப்பாக மீட்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தெலங்கானாவின் விகாராபாத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

‘‘இந்திய பாதுகாப்பு குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஏளனமாக பேசி வருகிறார். நம் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் தைரியம் காங்கிரஸுக்கு உள்ளதா?

அத்துமீறி நமது நாட்டின் எல்லையில் நுழையும் எதிரி நாட்டினரை நம்முடைய ராணுவ வீரர்கள் துவம்சம் செய்துள்ளனர். அவர்களை ஓட ஒட விரட்டி அடித்துள்ளோம். 3-வது முறையாக மோடி பிரதமர் பதவியேற்றதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கண்டிப்பாக மீட்கப்படும்.

காஷ்மீர் என்றென்றும் நம்முடைய நாட்டின் ஓர் அங்கம்தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதிகள் காப்பாற்றப்பட்டு வந்தனர். ஆனால், தீவிரவாதத்தை பிரதமர் மோடி வேரோடு அழித்துள்ளார்’’ இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமித் ஷா கூறியதாவது:

‘‘தெலங்கானா மாநில பட்ஜெட், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகி வந்துகொண்டே இருந்தது. ஆனால், பிஆர்எஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் கடன் வாங்கும் நிலைமைக்கு தெலங்கானா தள்ளப்பட்டது. இது காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்கிறது. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி கண்டிப்பாக அமையும்.

தெலங்கானாவில் 10 எம்பி தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். நாடு முழுவதிலும் நாங்கள் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மோடி பிரதமராக இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்குமென மக்கள் நினைக்கிறார்கள்.

பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு 75 வயதில் ஓய்வு அளிக்கப்பட்டது போல பிரதமர் மோடியும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவாரா என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார். 75 வயதில் ஓய்வு என்று பாஜகவில் எந்த வரையறையும் கிடையாது. பிரதமர் மோடி 75 வயதில் ஓய்வு பெற மாட்டார். அவர் தொடர்ந்து நாட்டை வழிநடத்துவார்.

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. ஜூன் 1 வரை அவர் பிரச்சாரம் செய்யலாம். ஜூன் 2-ம் தேதி அவர் சிறையில் சரண் அடைய வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal