மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறாராம்.

சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர் தான் முடிவு எடுப்பா’ என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம், ‘எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே?’ என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு, அதற்கான தேதியையும் குறித்துவிட்டாராம் மு.க.ஸ்டாலின்.

இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சீனியர் ஒருவரிடம் பேசினோம், ‘‘சார், மக்களவைத் தேர்தலில் சில இடங்களில் சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். சில புதியவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆகும் வாய்ப்புகள் வழங்கப்படும். அதன்படி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி அமைச்சர் பதவியில் இருந்து துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டங்களை வகுத்து வருகிறாராம். கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.

அதே சமயம், மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், உதயநிதியை துணை முதல்வராக்கும் திட்டம் தள்ளிப் போகலாம். ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால், அமைச்சரவை மாற்றத்தின் போதே உதயநிதியை துணை முதல்வராக்க தேதி குறித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என்றார்.

கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்துத்தானே ஆகவேண்டும்…?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal