அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? என்பது பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து புதிய மதுபான கொள்கை கைவிடப்பட்டது.

இருப்பினும் முறைகேடு புகாரில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் அடுத்தடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டனர். இதில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பி, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் மணிஷ் சிசோடியா, கவிதா சிறையில் உள்ளனர். சஞ்சய் சிங் எம்பியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனை (ஜுன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்) தொடர்ந்து 50 நாட்களுக்கு நேற்று கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இதையடுத்து இன்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு தனது மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை பார்த்து ஆம்ஆத்மி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

இதையடுத்து கெஜ்ரிவால் அவர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்தார். அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் சிறையில் இருந்து நேரடியாக உங்களை பார்க்க வருகிறேன். 50 நாட்களுக்கு பிறகு இது உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் எனது மனைவி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் ஹனுமன் கோவிலுக்கு சென்றேன். பஜ்ரங்பாலி நம்மையும், நம் கட்சியையும் ஆசீர்வதிப்பார். ஆம்ஆத்மி கட்சி என்பது 2 மாநிலங்களில் ஆட்சி செய்யும் சிறிய கட்சி.

ஆனால் பிரமதர் மோடி ஆம்ஆத்மியை நசுக்க நினைக்கிறார். இதனால் அடுத்தடுத்து 4 தலைவர்களை சிறைக்கு அனுப்பினார். கட்சியின் 4 முக்கிய லீடர்கள் சிறைக்கு சென்றால் கட்சியின் செயல்பாடு முடங்கிவிடும் என பிரதமர் மோடி நம்புகிறார். மேலும் ஆம்ஆத்மி கட்சிதான் நாட்டின் எதிர்காலத்துக்காக இருப்பதாகவும் அவர் நினைக்கிறார். இதனால் தான் ஆம்ஆத்மியை நசுக்க நினைக்கிறார்.

மேலும் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? ஏனென்றால், ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதோடு டெல்லியில் நம்மை அடுத்த 20 ஆண்டுகளில் வீழ்த்த முடியாது என்பதும் அவர்களுக்கு (பாஜகவினருக்கு) தெரியும். இதனால் சதித்திட்டம் தீட்டி என்னை ராஜினாமா செய்ய வைத்து ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க நினைத்தனர். இதனால் தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தே அரசை நடத்தினேன்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal