யூடியூபர் சவுக்கு சங்கரை நேர்காணல் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பபாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரெட் பிக்ஸ்’ ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சவுக்கு சங்கர் பேசிய கருத்துகளுக்காக பல்வேறு வழக்குப் பாய்ச்சப்பட்டு, ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நேர்காணலில் நெறியாளுகை செய்ததற்காக பெலிக்ஸ் ஜெரால்டையும் தற்போது கைதுசெய்திருப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல! பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைதுசெய்யும் இச்செயல்பாடு ஊடகச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும்.

இது ஊடகச் சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. காட்சி ஊடகங்கள், வலையொளிகளின் நேர்காணல்களில் பங்கேற்பாளர்கள் பேசும் கருத்துகளுக்கு அதன் நெறியாளர்களோ, அதனை ஒளிபரப்பும் ஊடகங்களோ ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை என்பது அடிப்படை ஊடகச்செயல்பாடு. அப்படியிருக்கையில், எதற்காக இந்த கைது நடவடிக்கை? திமுக அரசின் மீது விமர்சனங்களை வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் வெளிப்படையாக விடுக்கும் அச்சுறுத்தல் இல்லையா இது? திமுக ஆட்சியின் கொடுங்கோன்மையைப் பேசியவர்கள் எல்லாம் குறிவைத்து அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாவார்களென்றால், நடப்பது மக்களாட்சியா? இல்லை! பாசிச ஆட்சியா? பேரவலம்!

பெருமக்களே? பெரும் சாம்ராஜ்ஜியங்களும், பேரரசுகளுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகளே வரலாற்றில் வீழ்ந்திருக்கிறார்கள். மக்கள் கொடுத்த அதிகாரத்தில்தான் நீங்களெல்லாம் இன்று உயரே நிற்கிறீர்கள்! மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால் மொத்தமாய் சரிந்து விழுவீர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால், உங்கள் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தானே! அதற்குப் பிறகு, எங்கே இருப்பீர்கள்? ஆட்சியில் இருந்துகொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அடாவடித்தனமும், அட்டூழியமும் செய்யும் இதுபோன்ற பாசிச ஆட்சிகளையும், கொடுங்கோல் அரசுகளையும் மக்கள் கட்டாயம் தூக்கி எறிவார்கள் என ஆளும் ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்.

இத்தோடு, ஊடகவியலாளர் தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கையும், கைதுநடவடிக்கையையும், தம்பி சவுக்கு சங்கர் மீது சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும், புனையப்படும் பொய் வழக்குகளையும், அவர் மீதான அரசின் பழிவாங்கும் போக்கையும் வன்மையாக எதிர்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal