பெண் போலீசை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி உள்ள யுடியூபர் சவுக்கு சங்கரின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த சோதனை என்பது நடந்து வருகிறது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில் தான் பெண் காவலர்கள் குறித்து சமீபத்தில் அவர் கூறிய தகவல் சர்ச்சையானது. பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் அவரது கருத்து இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக புகாரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தபோது போலீசார் அவரது காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் 400 கிராம் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள வீடு, தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் நுழைந்து தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal