‘அதானி மற்றும் அம்பானிக்காக ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி’ என ராகுல் காந்தி குற்றஞ்சட்டிய நிலையில், ‘2014க்கு முன்பாக பெரு நிறுவனங்களிடம் காங்கிரஸ் பெற்ற நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராகுல் காந்தி தயாரா?’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர்ர பிரசாத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ‘ஒட்டுமொத்த இந்தியாவும் நமக்கு அடிமை’ என்ற நினைப்பு நேரு குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. நாடு சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தியின் தயவால், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு செல்ல வேண்டிய பிரதமர் பதவி நேருவுக்கு கிடைத்தது.
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில் இந்தியாவே நேருவின் கட்டுக்குள் வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனாலும், இரண்டு ஆண்டுக்குள்ளாகவே அவரது மர்ம மரணத்தால் ஆட்சியும், காங்கிரஸ் கட்சியும் நேருவின் மகள் இந்திராவிடம் சென்றது. இந்திராவின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ராஜிவ் பிரதமரானார். காங்கிரஸ் கட்சியும் அவரது பிடிக்குள் வந்தது.
ராஜிவ் கொல்லப்பட்ட பிறகு நரசிம்மாராவ் பிரதமராக இருந்த 5 ஆண்டுகள் சோனியாவை கொஞ்சம் ஓரங்கட்டி வைத்திருந்தார். அதற்கு பழிவாங்கவே நரசிம்மராவ் இறந்ததும் அவரது உடலை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்ககூட அனுமதிக்காமல், வலுக்கட்டாயமாக ஐதராபாத் அனுப்பி வைத்தார்கள்.
1996-ல் இருந்து காங்கிரஸ் கட்சி சோனியா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தாலும், அந்த அரசை கட்டுப்படுத்தியது சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேராதான். 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு கால ஆட்சி அதிகாரம் நேரு, – இந்திரா – ராஜிவ், – சோனியா, – ராகுல், – பிரியங்கா என நேரு குடும்பத்திடம்தான் இருந்தது.
இந்த அதிகார திமிர், ஆணவம் எப்போதும் அந்த குடும்பத்திற்கு உண்டு. அந்த அதிகார திமிர், ஆணவம் இப்போது சோனியா, ராகுல், பிரியங்காவிடம் வெளிப்படுகிறது. பொதுவாக ஒரு கிராமத்தில், ஒரு பகுதியில் பணம், பதவி என செல்வாக்கோடு இருப்பவர்கள், ‘என் மீது கை வைக்க முடியுமா?’, ‘முடிந்தால் கை வைத்து பார்’ என்றெல்லாம் சவால் விடுவார்கள். அதற்குப் பின்னால் இருப்பது பணக்கார திமிர், பதவி தந்த அதிகார திமிராக இருக்கும்.
நாட்டை ஆளத்துடிக்கும் நேரு குடும்பத்து இத்தாலிய இளவரசர் ராகுலிடம் அந்த அதிகாரத் திமிரை பார்க்க முடிகிறது. ராகுல் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழின் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை தன்வசமாக்கில் கொண்ட வழக்கில் ராகுல் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ், பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் அவதூறாகப் பேசி சவால் விட்டு உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் ராகுல். இப்படிப்பட்ட ராகுல்தான் இப்போது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடிக்கு சவால் விட்டு தனது பரம்பரை அதிகார திமிரை வெளிப்படுத்தி வருகிறார்.
2014ம் ஆண்டுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களிடம் பெற்ற நிதி பற்றி அனைவருக்குமே தெரியும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கணக்கில் வராமல் நன்கொடை பெற்று அதைக் கொண்டே தேர்தல்களை காங்கிரஸ் எதிர்கொண்டது.
ஆனால், நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததும் தேர்தல் பத்திரங்கள் மூலம் வங்கிகள் வாயிலாக நன்கொடைகள் பெற்றது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நிதிக்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால், இதை குறை கூறுபவர்கள், 2014க்கு முன்பு காங்கிரஸ் பெற்ற நிதி விவரங்களை வெளியிடத் தயாரா என்று கேட்க மாட்டார்கள். அந்த அளவுக்கு நேரு குடும்பத்து அடிமைகளாக பலரும் மாறி விட்டார்கள்.
அம்பானி, அதானியை போன்ற பெரும் பணக்காரர்களை விமர்சித்து கொண்டே, அவர்களிடம் நன்கொடைகளை வாங்கி குவிக்கிறது காங்கிரஸ். அம்பானி, அதானி குழும நிறுவனங்களுடன் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன.
ஆனால், தேர்தல் பிரசாரத்தில் மட்டும் வாய்ச்சவடாலாக ராகுல் சவால் விடுக்கிறார். இந்த வாய்ச் சவடாலை, பரம்பரை அதிகார திமிர், ஆணவத்தைதான் பிரதமர் நரேந்திர மோடி அம்பலப்படுத்தி இருக்கிறார். அதனால் மீண்டும் பிரதமர் மோடிக்கு அமலாக்கத்துறையை அனுப்ப தயாரா என சவால் விட்டுள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை வர வேண்டிய நேரத்தில் வரும். அதுபற்றி ராகுல் கவலைப்பட வேண்டும். அவரிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்.
2014க்கு முன்பாக குறைந்தபட்சம் 2004ல் ராகுல் எம்.பி.யான பிறகு கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எந்தெந்த நிறுவனங்களில் இருந்து, எவ்வளவு நன்கொடை பெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா, இந்திரா, ராஜிவ் காலம் முதல் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுடன் காங்கிரஸ் கட்சிக்கும், நேரு குடும்பத்திற்கு உள்ள நெருக்கமான, இணக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரியும்.
10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லையே, நம் பரம்பரைக்கு சொந்தமான பிரதமர் பதவியை ஒரு டீ கடைகாரர் மகன் பிடித்து விட்டாரே என்ற ஆதங்கம், எரிச்சல் ராகுல் காந்திக்கு இருக்கிறது. அதனால்தான் பிரதமர் மோடி மீது வெறுப்பை கக்கி வருகிறார். அதற்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்’’ கூறியிருக்கிறார்.