டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக, கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை (மே 10) விசாரித்து இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதற்கிடையே, கெஜ்ரிவால் மீது டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நாளை அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 09) அமலாக்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில்,‛‛ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.

தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரணையை தவிர்க்க வழிவகை செய்யும்” என தெரிவிக்கப்பட்டது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என ஆம்ஆத்மியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal