சென்னையில் பைக்கில் சென்றபோது இளைஞரின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி, பேருந்துக்கு அடியில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அசோக் என்ற இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக இன்று காலை 9 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துளார். அப்போது சாலையின் குறுக்கே இன்டர்நெட் கேபிள் வயர் தொங்கிக்கொண்டு இருந்துள்ளது. அசோக் அதனை கவனிக்காமல் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது அவரது கழுத்தில் அந்த கேபிள் வயர் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டது.

இதனால், நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். இருசக்கர வாகனத்தோடு, அவர் அப்போது அங்கு சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தின் அடியில் சென்று முன் சக்கரத்திற்கு கீழே விழுந்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.

இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் அசோக். பேருந்து ஓட்டுநர், இளைஞர் பைக்குடன் பஸ்ஸுக்கு அடியில் விழுவதைப் பார்த்து உடனடியாக சுதாரித்து பேருந்தை நிறுத்தியதன் காரணமாக சிறிய காயத்துடன் அசோக் தப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் பகுதிகளில் தனியார் இண்டர்நெட் சேவை நிறுவனத்தின் கேபிள் வயர் சிக்கியதன் காரணமாக நடந்த இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதியில், கேபிள் வயர்கள் இதுபோல சாலைக்கு குறுக்கே அடிக்கடி தொங்குவதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal