தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் முரளியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு ெசய்துள்ளனர். தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு சென்றது தெரியவந்துள்ளதால், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகத்திடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் வைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, பணம் கை மாறியதாக கூறப்படும் ஓட்டல் உரிமையாளரான பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் உடல் நலக்குறைவால் தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது 2 மகன்களான பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி பாலவாக்கத்தில் உள்ள கோவர்த்தன் வீடு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது ஓட்டல் ஆகிய 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ரூ.4 கோடியும், தேர்தல் செலவுக்காக கட்சியில் இருந்து வேட்பாளர்களுக்காக கொடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளதால், நயினார் நாகேந்திரனுக்கு பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தெரிந்தால், மற்ற வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விவரம் முழுமையாக தெரிந்துவிடும். இதனால், கோவர்தனுக்கு நெருங்கிய இடங்களில் நடந்த சோதனை மற்றும் அவரது 2 மகன்கள் அளித்த தகவலின் படி, பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜ நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஓரிரு நாளில் 2 பேருக்கும் சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்துவதற்கான பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பணத்தை தமிழகம் முழுவதும் வேட்பாளர்களுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் கட்சியின் மாநில செயலாளர் கேவச விநாயகத்திடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால், அவர் மீதான சிபிசிஐடியின் பிடி இறுகி வருவது உறுதியாகியுள்ளது.