சென்னையில் வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடங்களில் பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களின் வீடுகளை ஆவணங்கள் இன்றி ஆட்டையைப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 34 வருடங்களுக்கு முன்பு டீனாக பொறுப்பு வகித்தவர் விக்டர்! இவர் தனது மனைவியுடன் செனாய் நகரில் உள்ள இரண்டு கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பணி ஓய்வுக்குப் பிறகு விக்டர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வரும் தனது மகள் வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே சென்னையில் உள்ள வீட்டை, தனது வீட்டிற்கு பின்புறம் வசித்து வரும் சாந்தகுமார் என்பவரிடம் வீட்டை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

விக்டரும், அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில் கடந்த 1999ம் ஆண்டு சென்னைக்கு வந்த விக்டரின் மகள் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சாந்தக்குமார் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது பூர்வீக வீட்டை மீட்க இயலாமல் ஏமாற்றத்துடன் அமெரிக்கா சென்ற அவர், தனது பெரியல் இருந்த வீட்டை, தனது மகள் தீபா பெயருக்கு மாற்றினார்.
அதன் பின்னர் பல ஆண்டுகள் அவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் வீட்டை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி தனது தாத்தாவின் பூர்வீக வீட்டிற்கு சென்ற தீபா, அந்த வீட்டில் தவறான செயல்களில் சமூக விரோதிகள் சிலர் ஈடுபடுபவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சாந்தக்குமார் பேரன் என்று சொல்லிக்கொண்டு அந்த வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த தினேஷ், தனது வீட்டில் வளர்த்துக்கொண்டிருந்த நாய்களை ஏவிவிட்டு தீபாவை கடிக்க விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அப்படியே கடந்த 27ம் தேதி சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகாராக அளித்தார் தீபா. இந்த வீடு தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை ஆதாரங்களாக காட்டியிருக்கிறார்.

அமெரிக்க தூதரகத்தின் உதவியுடன் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க்கை சந்தித்து தீபா நேரடியாக புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் விரிவான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்தபோது, தீபாவிற்கு சொந்தமான பொருட்களை அகற்றிவிட்டு தனக்கு சொந்தமான பொருட்களை வைத்துக்கொண்டு, தன் வசதிக்கேற்ப வீட்டையே மாற்றியமைத்தது தெரியவந்தது.

சென்னை போலீசார் நடத்திய விசாரணையில் தீபா கொடுத்த ஆவணங்கள் உண்மை என தெரியவந்த நிலையில், போலீசார் வீட்டை ஆக்கிரமித்திருந்த தினேஷை எச்சரித்தனர். உடனடியாக வீட்டின் சாவியை தீபாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார் தினேஷ்! வீட்டின் பின் பக்கம் தனி அறைகளில் தங்கியிருந்தவர்கள் வீட்டை காலி செய்ய இரண்டு மாதம் அவகாசம் கேட்டதால், காவல்துறையினரும், தீபாவும் அவகாசம் கொடுத்திருக்கின்றனர். தினேஷிடம் வீடு தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால், தீபாவிடம் ஆவணங்கள் இருந்ததால், வீட்டை எளிதாக மீட்டுக்கொடுத்தனர் காவல்துறையினர்.

சென்னையில் 34 வருடம் கழித்து சென்னையில் உள்ள வீட்டை மீட்ட தீபா, காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal