பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக இளைஞர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . இதனையடுத்து அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக இளைஞர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர் கைது, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு கஞ்சா கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

மேற்கண்ட இரு வழக்குகள் அல்லாமல் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குறித்து ‘கோலமாவு சந்தியா’ என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய‌ பக்கத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சவுக்கு சங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal