தமிழகத்தில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறிவந்த நிலையில், கர்நாடகாவிலும் பா.ஜ.க.விற்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது.
‘‘300 பெண்களை பலாத்காரம் செய்து 3000 ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை நாட்டை விட்டு தப்பி ஓடவிட்டதே பிரதமர் மோடிதான்’’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனும் சிட்டிங் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார புகார்கள், ஆபாச வீடியோக்கள் சர்ச்சை ஒவ்வொரு நாளும் பிரளயத்தை கிளப்பிக் கொண்டே இருக்கின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் பிரஜ்வல் தந்தை ரேவண்ணா, 5 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இதை ஏன் இப்போது கிளப்புகிறீர்கள்.. இது எங்கள் குடும்பத்துக்கு சத்திய சோதனை என்கிறார். பிரஜ்வலின் சித்தப்பா முன்னாள் முதல்வர் குமாரசாமி, இதில் ஏன் தேவகவுடா குடும்பத்தை இழுக்கிறீர்கள் என்கிறார். கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரஜ்வல் விவகாரம் குறித்து பேசியதாவது: ‘‘பெண்களின் தாலி பற்றி எல்லாம் பேசுகிறார் பிரதமர் மோடி. ஆனால் பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த பிரஜ்வல் ரேவண்ணா பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார். பெண்களை நாசமாக்கியது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா.
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்குதான் ஓட்டு கேட்டனர். ஆனால் ஆயிரக்கணக்கான பெண்களை சீரழித்த பிரஜ்வல் பற்றி எதுவுமே பேசாமல் மோடியும் அமித்ஷவும் இருக்கின்றனரே.. பிரஜ்வல் நாடு திரும்பும் வரை பிரதமர் மோடியை பெண்கள் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாகிவிட்டன. இதனால் கல்புர்கி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெல்லி, ஹைதராபாத் என நாட்டின் இதர நகரங்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடிச் செல்கிற அவலம் ஏற்பட்டுவிட்டது. விவசாயிகளை நசுக்கக் கூடியவராக பிரதமர் இருக்கிறார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என ஏமாற்றிவிட்டார் பிரதமர் மோடி. ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் சாசனத்தையும் பலவீனப்படுத்துகிறார் பிரதமர் மோடி’’ இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
இந்த விவகாரம் குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசியபோது, ‘‘சார், கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது. ஆனால், தற்போது பூதாகரமாக வெடித்துள்ள பாலியல் விவகாரம் பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் (பாண்டிச்சேரி உள்பட) தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நிலையில், கர்நாடகாவிலும் பா.ஜ.க.விற்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. சில வட மாநிலங்களிலும் பா.ஜ.க. மீதான அதிருப்தியை காங்கிரஸ் கட்சி தூண்டி விடும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி’’ என்றனர்.