பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் உள்பட 3 பேரை கைது செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், ” மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். என்னை முழுவதுமாக குறி வைத்துள்ளனர். அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். ரூ.4 கோடியை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கி வருகின்றனர். பிடிபட்ட பணத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. பலமுறை கூறிவிட்டேன். போலீசார் கடமையை செய்கின்றனர். என் தரப்பில் முழு ஒத்துழைப்பு தருவேன்.