விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ‘ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது. தி.மு.க.வினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடிதான். அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. வினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

இந்தியாவிலேயே பா.ஜ.க. மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. தி.மு.க.வில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம். தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக, ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன்.

இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’. இவ்வாறு அவர் பேசினார். 


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal