தமிழ்நாடு அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுக வேட்பாளராக களமிறங்குவதால் நட்சத்திர தொகுதியாக கவனம் ஈர்த்துள்ளது.

பெரம்பலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை.

பெரம்பலூர் லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: 14,39,315; ஆண்கள்- 6,97,984; பெண்கள் – 7,41,200; 3-ம் பாலினத்தவர்- 131

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் நெப்போலியன்(திமுக) 3,98,742 பாலசுப்பரமணியன்(அதிமுக) 3,21,138 துரை காமராஜ்(தேமுதிக) 74,317

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் ஆர். பி. மருதராஜா(அ.தி.மு.க) 4,62,693 சீமானூர் பிரபு(தி.மு.க) 2,49,645 பாரிவேந்தர்(ஐ.ஜே.கே) 2,38,887 ராஜசேகரன்(காங்கிரஸ்) 31,998

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பாரிவேந்தர் (திமுக) 6,83,697 சிவபதி(அதிமுக) 2,80,179 நாம் தமிழர் கட்சி 53,545 4.86%

2024-ம் ஆண்டு களத்தில்.. அருண் நேரு (திமுக) சந்திர மோகன் (அதிமுக) பாரிவேந்தர் (ஐஜேகே பாஜக) தேன்மொழி (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பெரம்பலூர், கரூர், திருச்சி, ஆகிய 3 மாவட்டங்களின் 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு முத்தரையர்கள் முதன்மை வாக்காளர்கள். தலித்துகள், ரெட்டியார்கள், உடையார்கள், யாதவர்கள், நாயுடு, வன்னியர், எஸ்டி கணிசமான வாக்காளர்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பெரம்பலூர்.

திமுக மூத்த தலைவர் ஆ.ராசா 2 முறை வென்ற தொகுதி இது. 2009-ல் நடிகர் நெப்போலியன் இத்தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். விவசாயம்தான். பெரம்பலூர் தொகுதியின் பிரதானம். சின்ன வெங்காயம், மக்கா சோளம் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருக்கிறது பெரம்பலூர். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் கேட்பாரற்று கிடப்பது என்பது வாக்காளர்கள் வருத்தம். சின்ன வெங்காயம், பருத்தி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் உப தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. காய்கறி, பழங்களை பாதுகாக்க கிடங்குகள் கூட அமைக்கப்படவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகளாக பேசு பொருளாக இருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் எப்போதுதான் வரும் என்பது இத்தொகுதி மக்களின் ஏக்கம். பெரம்பலூருக்கு ரயில் சேவை தேவை என்பதும் எதிர்பார்ப்பு.
திமுக 7 முறை, அதிமுக 6 முறை, காங்கிரஸ் 2 முறை வென்ற தொகுதி. இம்முறை தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அருண் நேரு போட்டியிடுவார் என்றதும், ‘அவருக்கு வெற்றி வாய்ப்பு உறுதி!
என்றனர் உடன் பிறப்புக்கள். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பிறகு பெரம்பலூர் தொகுதில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவியது. இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரும், பெயருக்கேற்றவாரே தி.மு.க.விற்கு ஒருபடி மேலே போய் விட்டமினை வாரியிரைத்து வருகிறார்.

தி.மு.க., ஐ.ஜே.கே. இரண்டு கட்சிகளும் விட்டமினை வாரியிரைத்து வரும் நிலையில், பெரம்பலூர் தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான சமுதாயமான முத்தரையர் சமுதாய மக்களின் ஆதரவு தனக்கு முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் என்.டி.சந்திரமோகன்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி துறையூருக்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மக்கள் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அதிக நேரம் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் வருகைக்குப் பிறகு கள நிலவரம் கொஞ்சம் மாறியிருக்கிறது என்கிறார்கள்.

பெரம்பலூர் தொகுதியில் வெல்லப்போவது யார் என்பதை ஜூன் 4 ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal