தமிழகத்தின் மையப்பகுதி நகரம் திருச்சி. திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன், புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை தொகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மக்களவைத் தொகுதி. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி. அவர் மட்டுமின்றி பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி இது.

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கருப்பையா, பா.ஜனதா கட்சி கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களைப் பொறுத்தவரை அதிமுக தற்போது பிரச்சாரத்திலும், பிற கவனிப்புகளிலும் முந்தியிருக்கின்றது. அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் பரிச்சயமானவர் என்பதாலும், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பலத்தாலும், மக்களுக்கு பரிச்சயமான இரட்டை இலை சின்னத்தின் யானை பலத்தாலும் தொகுதியில் முந்திக்கொண்டிருக்கின்றார்.

ஆனால், தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ. கடந்த முறை திருச்சி பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் சு.திருநாவுக்கரசர். இவர் தொகுதி பக்கமே 5 ஆண்டுகளாக எட்டிப்பார்க்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு கடுமையாக எழுந்தது.

அதனால்தான் திருநாவுக்கரசருக்கு போட்டியிட காங்கிரஸ் மேலிடம் சீட் மறுத்துவிட்டது. கடந்த ஆட்சியின் அதிருப்திகள் சில இடங்களில் துரை வைகோ வாக்கு கேட்டு செல்லும்போது, அந்த எதிர்ப்பு அலை இன்னும் இருக்கிறது. தவிர, தி.மு.க.வினரே திருச்சி தொகுதியை சம்மந்தமில்லாதவர்களுக்கு எப்போதும் கொடுத்து விடுகின்றனர் என்ற அதிருப்தியில் உள்ளனர். இதனால், தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சி எரியுமா என்பதே மில்லியன் டாலர்கேள்வியாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal