தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். கூடுதல் பாதுகாப்பு தேவைக்கு அண்டை மாநிலங்களில் உள்ள போலீசாரை அவர்களுக்குரிய செலவினங்களை ஏற்று, பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து மாநில காவல் துறை இயக்குநர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசார் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தெளிவாக உள்ளது.

யாருக்கெல்லாம் தபால் வாக்குகள் வந்து சேரவில்லையோ அவர்களுக்கு தபால் வாக்குகள் விரைந்து கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ள மையங்களில் பதிவு செய்யலாம்.

நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் மட்டுமே. ஜூன் 4-ந்தேதி காலை 8 மணிக்கு (வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம்) முன்பு வரை தபால் வாக்குகளை அனுப்ப அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal