நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நீலகிரியிலும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என களமிறங்கியிருப்பதால், நீலகிரி தொகுதியே ஸ்டார் தொகுதியாகிவிட்டது.

நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு;

உதகையில், திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, ‘திரைப்பட நகரம்’ அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும். உதகையில் சர்வதேச தரத்தில் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம்’ உருவாக்கப்படும்; உதகை காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.  நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள HPF தொழிற்சாலையானது நவீன தொழிற் பூங்காவாக (IT Park) அமைத்து தரப்படும்.  மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இருப்புப்பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உதகை நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களுக்கு மல்டி லெவல் பார்க்கிங் வசதி. நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.  படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சுற்றுலா மையம், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.  மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal