நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பிடிப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் யாருடைய பணம் என கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலமும் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி தாம்பரம் ரெயில்நிலையத்தில் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலில் படி காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ்.7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுகட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று நபர்களை கைது செய்த போலீசார் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் .
அப்போது அந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரும், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர் . பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.இந்த நிலையில் பிடிப்பட்ட. நபர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லை பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு இன்று தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பியுள்ளது. வருகின்ற 21ஆம் தேதிக்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பணம் பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் உட்பட 8 நபர்களுக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பணம் பறிமுதல் தொடர்பாக போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. அதில்,பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக அந்த எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.