ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருச்சுழி ஆகிய தொகுதிகளை திமுகவும், திருவாடானை, அறந்தாங்கி தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் வென்றன.
இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணியில் தற்போதைய எம்பியான நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 25 பேர் போட்டியிடுகின்றனர்.
நவாஸ் கனி எம்பி தொகுதிக்கு பெரிய அளவில் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பலம்வாய்ந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நவாஸ் கனி.
ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் என்பதால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த நட்சத்திர வேட்பாளராக வலம் வருகிறார். மேலும் அவருக்கு இத்தொகுதியில் சமுதாயரீதியான வாக்குகளும், பல தரப்பு மக்களும், அதிமுகவில் உள்ள ஒரு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனது அரசியல் எதிர்காலத்துக்கு இந்த தேர்தல் முக்கியமானது என்பதால் ஓபிஎஸ் வாக்குகளை பெறுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.
அரசியல் எதிரியான ஓபிஎஸ்ஸை தோற்கடித்தாக வேண்டும் என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதால் தொகுதியில் பிரச்சாரம் சூடு பறக்கிறது. இந்த நிலையில்தான் ராமநாதபுரம் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி அம்மாவட்டத்தில் உள்ள நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், ராமநாதபுரம் கள நிலவரம் டஃப் பைட்டாக இருக்கிறது. இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சிக் காரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து வேண்டுமென்றே கட்டம் கட்டி ஒதுக்கப்பட்டதால், அந்த ஆதரவும் அவருக்கு இருக்கிறது.
அ.தி.மு.க.வில் உள்ள நிர்வாகிகளே சிலர் மறைமுகமாக ஓ.பி.எஸ்.ஸுக்கு தேர்தல் களத்தில் உதவிபுரிகின்றன. மேலும், ஓ.பி.எஸ்.ஸின் மகன்கள் ஜெயபிரதீப் மற்றும் எம்.பி., ரவீந்திரநாத் ஆகிய இருவரும் பம்பரமாக சுற்றி களப்பணியாற்றிவருகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி தொகுதி. தி.மு.க. அலை தமிழகம் முழுவதும் வீசிய நிலையிலும், தேனியில் ரவீந்திரநாத்தின் தேர்தல் கள அரசியல் காய்நகர்த்தல்கள் அவருக்கு கை கொடுத்தது. அதே போல் தந்தையின் வெற்றிக்கும் சில வியூகங்களை வகுத்து எப்படியாவது வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்று களப்பணியாற்றுகிறார்’’ என்றனர்.
பலாப்பழம் பழுக்குமாக என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.