‘நான் எப்போதும் திருச்சி மக்களுக்காக குரல் கொடுப்பேன்’ என உறுதி கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து தனக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஓட்டளிக்க வலியுறுத்தினார்.
தொடர்ந்து, இங்கிலீஷ் காய்கறி கண்டி, பூ மார்க்கெட், மீன் மார்க்கெட், வெங்காய மண்டி உள்ளிட்ட இடங்களிலும் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்களிடம் கருப்பையா ஓட்டு சேகரித்து பேசியதாவது:
‘‘அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நான் உங்களைப்போன்று எளிய குடும்பத்தில் பிறந்தவன். அதனால், ஒரு வியாபாரியின் மனநிலை, கஷ்டங்கள் என அனைத்தையும் அறிந்தவன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த விஷயத்திலும் எப்போதும், இந்த கருப்பையா வியாபாரிகளின் பக்கம் தான் உறுதியாக நிற்பேன். காந்தி மார்க்கெட்டுக்காக கள்ளிக்குடியில் ஒரு மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இப்போது பஞ்சப்பூரில் மீண்டும் ஒரு மார்க்கெட் கட்டப்போவதாக கூறியுள்ளனர். அது எப்போது வரும் என்று தெரியவில்லை.
இவ்விஷயத்தில் வியாபாரிகள் அனைவரையும் அழைத்துப்பேசி, அவர்களது கருத்தைக் கேட்டு அதனடிப்படையில், வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு சார்பில் முடிவு எடுக்க வலியுறுத்துவேன். அதேசமயம், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்ன வழிவகை செய்ய வேண்டும், அதற்கான உங்கள் ஆலோசனைகளை கேட்டறிந்து நடைமேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். இங்குள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அவற்றை தீர்க்க, உங்களுடன் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.
திருச்சியில் அதிமுகவுக்கு என்று எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இல்லை. அதனால், உங்கள் குறைகளை நீங்கள் எங்கு சொன்னாலும் ஆளுங்கட்சியில் ஒரே இடத்திற்கு சென்று, அவர் மட்டும் தான் முடிவெடுப்பார். ஆனால், எம்பியாக என்னை தேர்ந்தெடுத்தால், உங்கள் குரலாக, உங்களுக்கு ஆதாரவாக, வியாபாரிகளின பிரதிநிதியாக, வியாபாரிகளின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் போராடுவேன். அதற்கு நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய் வேண்டும்’’, என்றார்.