‘‘இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்’’ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தமிழர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் அனைவரும் பெருமை கொள்வோம் எனத் தெரிவித்தார். மேலும் இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும். தமிழ் மொழியை எல்லா இடங்களிலும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் உருவாக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்தி வரும் மோடி, பா.ஜ-க.வின் தேர்தல் அறிக்கையிலும் தமிழ் மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் உருவாக்கப்படும் என தமிழர்களின் நலன் கருதி, அவர்களின் வாக்கு வங்கியை குறி வைத்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!