நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று உரிமை கொண்டாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தனுஷை தன்னுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்து கதிரேசன் – மீனாட்சி என்கிற தம்பதி வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் தனுஷ் அவர்கள் தன்னுடைய பெற்றோர் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். முதலில் மேலூர் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி ஆன நிலையில், பின்னர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அந்த தம்பதி, தங்களுக்கு வயதாகிவிட்டதால் தங்களுடைய மகன் தனுஷிடம் இருந்து தங்களுக்கான பராமரிப்பு தொகை வழங்கிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த இரு வழக்குகளுமே போதிய ஆதாரங்கள் இன்றி தள்ளுபடி ஆனது. இதனிடையே 70வயதாகும் கதிரேசன், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கதிரேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவர் கடைசி காலத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலூர் கோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட்டில் தனுஷ் தனது மகன் என உத்தரவிடக் கோரி கதிரேசன் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி ஆனாலும், மாவட்ட கோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal