தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கொள்கைகளாக தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பம் என்று குறிப்பிட்டார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பதுதான் நமது இலக்கு என்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

விஜய் அரசியல் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கிடையே பரபரப்பையும் ரூ.200 கோடிக்கு மேல் சினிமாவில் சம்பளம் வாங்கும் விஜய் அதை  விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வருகிறாரே என பொதுமக்கள் மத்தியில் வியப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு காட்டுத் தீயாக பற்றிக் கொண்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி அவரது கட்சியில் இதுவரை 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளனர். இத்தனை லட்சம் வாக்குகள் எந்த கட்சிக்கு செல்லும் என்பது அரசியல் கட்சிகள் மத்தியில் புரியாத புதிராக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு விஜய் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என செய்திகள் வெளியானது. இதையடுத்து அந்த அறிக்கை போலியானது என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற தேதி நெருங்கும் நிலையில் விஜய் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது பரபரப்பாக உள்ளது. இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்த போது பாராளுமன்ற தேர்தல் ஆதரவு பற்றி விஜய் ஏற்கனவே கட்சி தொடங்கிய போதே அறிவித்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளார். விஜய் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருக்கிறார். தேர்தலுக்கு 2 தினங்களுக்கு முன்பு வாக்களிப்பதற்காக சென்னை வருகிறார் என கூறினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal