தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய மந்திரி அமித்ஷாவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவர் நேற்று மதுரையில் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்பு அவர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். தக்கலையில் ரோடு-ஷோவை முடித்துக் கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார். அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் ரோடு-ஷோ நடந்த பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal